Skip to content
Home » வேட்புமனு முடிந்தது

வேட்புமனு முடிந்தது

  • by Senthil

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40  நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இங்கு  கடந்த 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் நல்ல நாள் என்பதால் பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் அன்றைய தினம் மட்டும் 405 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

வேலூர் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 12 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் களம் காண்கிறார். அவர் ஏற்கனவே மனு தாக்கல் செய்து விட்டார். அவரது பெயர் கொண்ட 5 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் சண்முகம் என்ற பெயரில் 6 பேர் போட்டியிடுகின்றனர்.

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர்  ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். இதே பெயரில் மேலும் 4 ஓபிஎஸ் சுயேச்சைகளாக மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மேலும் பல ஓபிஎஸ்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வரை தமிழகத்தில் 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கடைசி நாளான இன்றும்  வேட்புமனு தாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கியது.  தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் இன்று மனு தாக்கல் செய்தார்.  மயிலாடுதுறை தொகுதியில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் சுதா  வேட்புமனு தாகக்கல் செய்தார். கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை,  சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன், தஞ்சையில் திமுக வேட்பாளர்  முரசொலி,  பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தம், கரூர் காங். வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட 40 தொகுதி்களிலும் இன்றும் வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.  பிற்பகல் 3 மணிக்கு  மனு தாக்கல் முடிவடைகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நேரமான மதியம் 3 மணிக்குள் டோக்கன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவ்வாறு டோக்கன் பெற்றவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைந்த பின்னரும் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

நாளை  (வியாழக்கிழமை) வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாள். அன்றைய தினம் மதியம் 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். இதைத்தொடர்ந்து அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்பின்பு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!