உலகிற்கு இந்தியா வழங்கிய கொடையான யோகா கலையைப் போற்றும் வகையில், 12-ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘ஆரோக்கியமான முதுமைக்கான யோகா’ (Yoga for Healthy Ageing) என்ற கருப்பொருளின் (Theme) கீழ் நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் முக்கிய நிகழ்வாக, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான யோகா பயிற்சி நடைபெற்றது. காலை 6:30 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில் பிரதமர் மோடி முதலில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் யோகா நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 35,000 பேர் ஒரே இடத்தில் கூடி யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய யோகா நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். மேலும், கொல்கத்தாவின் பிற பகுதிகளில் நடைபெற்ற பயிற்சிகளையும் சேர்த்து மொத்தம் 10 லட்சம் பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.
