அரியலூர் மாவட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பொதுமக்கள் அனைவரும்
சுயக் கணக்கெடுப்பில் தவறாமல் பங்கேற்று, சரியான விவரங்களை முழுமையாக பதிவு வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அறிவுறுத்தல்.
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுயக் கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பானது முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அரசு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதற்கும், எதிர்வரும் காலங்களில் பொதுமக்களின் தேவைகளை மதிப்பீடு செய்து பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்குவதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமாக விளங்குகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 சுயக் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நமது கணக்கெடுப்பு நமது வளர்ச்சி, வீடு தேடி வரும் முன் விரல் நுனியில் கணக்கெடுப்போம், வலுவான தரவு வலுவான இந்தியா, நம் கணக்கு நம் வளர்ச்சி சுயக் கணக்கெடுப்பு நம் கடமை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு (Self enumeration) 31.07.2026 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் சுய கணக்கெடுப்பினை தாங்களாகவே இணையதளம் https://se.census.gov.in வாயிலாக தங்கள் விவரங்களை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் பணியான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு வருகிற 01.08.2026 முதல் 30.08.2026 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் https://se.census.gov.in என்ற இணையதளம் வாயிலாக சுயக்கணக்கெடுப்பில் பங்கேற்று, மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 வகையான கேள்விகளுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குவதுடன், மக்கள்தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ந.கனக மாணிக்கம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, அரியலூர் வட்டாட்சியர் தேவகி, தனி வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) கண்ணன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
