Skip to content
Home » குடிநீர் ஆழ்குழாய் அருகே, கழிவு நீர்….. பெரம்பலூரில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

குடிநீர் ஆழ்குழாய் அருகே, கழிவு நீர்….. பெரம்பலூரில் 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  கற்பகம்  கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

வி.களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராயப்பா நகரில் கடந்த 1ம்தேதி மற்றும் 4ம்தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தகவல் வரப்பெற்றதைத் தொடர்ந்து, பொது சுகாதாரத் துறை மருத்துவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்  ஆய்வு செய்திட உத்தரவிடப்பட்டது. அதில் இப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுக்கு  அருகே கழிவு நீர் செல்வதை கண்டறிந்து, இக்குடிநீர் ஆதாரத்திற்கு சற்று தள்ளி அருகே தேங்கியிருந்துள்ள கழிவு நீர் கசிந்திருக்க வாய்ப்புள்ளதால் அதிலிருந்து குடிநீர் விநியோகம் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டு, லாரிகள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் பொது சுகாதாரத் துறையினர் மூலம் நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் காய்ச்சல் கண்டறியப்பட்ட நபர்களுக்கு, அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பின் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சல் கொசுக்களால் பரவுகின்றதே தவிர தண்ணீரால் அல்ல. இதில் இக்கிராமத்தைச்சேர்ந்த 2 பேர் நேற்று முன்தினம் இறந்துள்ளனர். ஒருவருக்கு வலிப்பு நோய் இருந்து அவர் உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாததும், மற்றொருவருக்கு பிட்யூட்டரி பிரச்சனைக்கு உரிய தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாததுமே  இருவரின் மரணத்துக்கு காரணமாகும். அவர்கள் இறந்ததற்கு குடிநீரோ அல்லது டெங்கு போன்ற காய்ச்சலோ காரணம் அல்ல என மருத்துவ வல்லுநர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

எனினும் பொது குடிநீர் ஆதாரம் அருகே கழிவு நீர் செல்வதை கண்காணிக்கத் தவறியமைக்கு வி.களத்தூர் கிராம ஊராட்சியின் ஊராட்சி செயலாளர் முருகேசன் அப்பகுதியில் தற்போது பணியாற்றிவரும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளிதாஸ் மற்றும் ஏற்கனவே பணியாற்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஊராட்சி தலைவர் மற்றும துணைத் தலைவர் ஆகியோர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவு 205 மற்றும் 206 ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே மர்மக் காய்ச்சல் பரவுகின்றது என்றோ, அதனால் உயிரி்ழப்பு ஏற்படுகின்றது என்றோ தவறான கருத்தை பொதுவெளியில் பரப்பி பொதுமக்களை அச்சதுக்குள்ளாக்கும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!