திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் கிராமம் அம்பேத்கர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் கண்ணதாசன். இவரது மகன்கள் அருள்(10), அஜய்(8) மற்றும் சந்தீப்(7). இவர்களும், அதே கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் ஹரி கிருஷ்ணன் மகன் ஜீவன்குமாரும்(8) என 4 பேரும் கங்கநல்லூர் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது 4 பேரும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். அதில் அஜய் என்ற சிறுவனை மட்டும் அவ்வழியாக வந்தவர்கள் மீட்டுள்ளனர். மற்ற சிறுவர்கள் நீரில் மூழ்கினர். இதனையடுத்து கிராம மக்களும்,பெற்றோரும் விரைந்து ஏரிக்கு வந்து சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு, 3 சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்த சிறுவர்களான அருள் லாடவரம் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பும், சந்தீப் 2-ம் வகுப்பும், ஜீவன்குமார் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.