இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட மூன்று அதிநவீன போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட உள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நாளை (ஜூன் 21) நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த மூன்று புதிய போர்க்கப்பல்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்து, கடற்படையின் சேவையில் இணைத்து வைக்கிறார். ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு பாதுகாப்புத் தயாரிப்பில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் கடல்சார் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடல்வழி வர்த்தகப் பாதைகளைப் பாதுகாப்பதில் இந்திய கடற்படை மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. சமீபத்திய உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில், கடற்படையை நவீனமயமாக்குவது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. வெளிநாட்டு இறக்குமதிகளைக் குறைத்து, இந்தியாவிலேயே போர்க்கப்பல்களை வடிவமைத்து தயாரிக்கும் இலக்கின் தொடர்ச்சியாகவே, இந்த மூன்று அதிநவீன கப்பல்களும் பாதுகாப்புப் படையில் தற்போது இணைக்கப்படுகின்றன.
கொல்கத்தாவில் ஜூன் 21 அன்று நடைபெறும் சிறப்பு பாதுகாப்புத்துறை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இந்த விழாவில், எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் பயணிக்கும் ‘ஸ்டெல்த்’ (Stealth) தொழில்நுட்பம் கொண்ட துனாகிரி (DUNAGIRI) போர்க்கப்பல், ஆழ்கடல் மற்றும் எல்லைப் பகுதிகளை ஆய்வு செய்யும் கவணிப்புக் கப்பலான சன்சோதக் (SANSHODHAK), மற்றும் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்ட அக்ரே (AGRAY) ஆகிய மூன்று உள்நாட்டு தயாரிப்புக் கப்பல்களும் ஒரே மேடையில் கடற்படை சேவையில் முறைப்படி இணைக்கப்பட உள்ளன.
