Skip to content
Home » திருச்சி ஆவினில் 43 பேர் நியமனத்தில் முறைகேடு? போலீஸ் விசாரணை…. சிக்கப்போவது யார், யார்..?..

திருச்சி ஆவினில் 43 பேர் நியமனத்தில் முறைகேடு? போலீஸ் விசாரணை…. சிக்கப்போவது யார், யார்..?..

  • by Senthil

அ.தி.மு.க. ஆட்சி யின்போது 2020- 21-ம் ஆண்டுகளில்,  திருச்சி, மதுரை, தேனி, திருப் பூர், நாமக்கல், விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில்  மேலாளர்கள், துணை மேலாளர்கள், விரிவாக்க அலுவலர், இளநிலை செயலர் உள்பட பல் வேறு பணியிடங்கள்  விதிமுறைகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில் 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இதில் திருச்சி ஆவின் நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்ட 43 பேரின் பணி நியமன ஆணையும் ரத்து செய்யப்பட்டது.

இந்த ரத்து உத்தரவை  எதிர்த்து 43 பேரும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணிக்கு நியமிக்கவும், பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதா?என திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்தநிலையில் திருச்சி ஆவினில் நடைபெற்ற நேரடி பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் பற்றியும், தேர்வுக்கு பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் காணாமல் போனதை கண்டுபிடித்து தரக்கோரியும் ஆவின் பொதுமேலாளர் முத்துமாரி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியிடம் புகார் மனு அளித்தார். மனு மீது உரிய விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டதின்பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவினில் பெரும்பாலானவர்கள்  பணம் கொடுத்தும்,  கட்சி செல்வாக்கிலும்  பணி நியமனம்  பெற்றவர்கள் என கூறப்படுகிறது.  போலீஸ் விசாரணையில் இதுபற்றிய  உண்மைகள் வெளிவரும் பட்சத்தில் தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் அவர்களிடம்  பணம் பெற்றவர்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் என பலரும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!