Skip to content
Home » காசாவில் …..ஹமாஸ் அமைத்துள்ள 500கி.மீ. சுரங்கம்….தரைமட்டமாக்க இஸ்ரேல் திட்டம்

காசாவில் …..ஹமாஸ் அமைத்துள்ள 500கி.மீ. சுரங்கம்….தரைமட்டமாக்க இஸ்ரேல் திட்டம்

 

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர், அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், காசா பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது. பொதுவாக போர் நடைபெற்றுவரும் காசா பகுதியை நகரம் என குறிப்பிட்டு வரும் பலருக்கு தெரியாத விஷயம், காசா ஒரு நகரம் அல்ல. இரண்டு நகரம்.

ஆம்.. தரைக்கு மேல் 41 கிலோமீட்டர் நீளமுள்ள காசாவில் பூமிக்கு அடியில் சிலந்தி வலை போல் சுமார் 500 கிலோமீட்டர் நீளத்திற்கு ஹமாசின் சுரங்க நகரம் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்த சுரங்க நகரத்தை காசா மெட்ரோ என இஸ்ரேல் கூறிவரும் நிலையில், அதனை அடியோடு அழிப்பதே இஸ்ரேலின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. ஏனெனில், ஹமாஸ் முழுக்களின் மொத்த சாம்ராஜ்ஜியமும் அங்குதான் நடைபெறுகிறது.

ஹமாஸ் படைகளின் தீவிரவாதிகளுக்கு இச்சுரங்க நகரம் தங்குமிடமாக இருப்பதோடு, இங்கு பல ஆயுதக்கிடங்குகளும் அமைந்துள்ளதாம். இப்படி தொடர்ந்து அச்சுறுத்திவரும் சுரங்கத்தை அழிக்க இஸ்ரேல் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. ஹமாசின் இந்த விபரீத சுரங்க கட்டுமானத்தை சிதைக்க 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் சுரங்கங்கள் இருக்கும் பகுதியை கணித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஆனால் 5 சதவீத சுரங்கத்தை கூட இஸ்ரேல் அழிக்கவில்லை என ஹமாஸ் மார்தட்டிக்கொண்டது.

அதற்கு ஏற்றாற்போல, இந்த சுரங்க உலகத்தின் துல்லியமான விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறியப்படவில்லை. இதனால், இதனை சுவடே இல்லாமல் அழிக்க பல்வேறு வியூகங்களை வகுத்துவரும் இஸ்ரேல், காசா மக்களை வெளியேற்றி, அதன்பின் தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறது. ஆனால் வான்வெளி, தரைவழி தாக்குதலால் சுரங்க நகரத்தை அழிக்க முடியாது என புரிந்துகொண்ட இஸ்ரேல், நுரைகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. நுரைகுண்டுகள் என்பது வெடிபொருட்களால் ஆனது அல்ல. பல ரசாயனங்களால் தயாராகும், நுரைகளை வெளியேற்றும் குண்டுகள் என கூறப்படுகிறது.

இதனை சுரங்கத்தின் வாயில்களை கண்டறிந்து வீசினால், குண்டுகளிலிருந்து நுரை வெளியாகி, சுரங்கப்பாதை முழுவதையும் அடைத்துவிடும். இதனால், எதிர் தாக்குதல் நடத்தமுடியாமல் ஹமாஸ் முழு சுரங்கத்திற்குள்ளேயே சமாதியாகிவிடும். இதுமட்டுமின்றி, மற்றொரு திட்டத்தையும் இஸ்ரேல் கையில் வைத்துள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் ஹமாசின் சுரங்கப்பாதைகளில் தண்ணீரை செலுத்தி சுரங்க நகரத்தை தண்ணீரில் மூழ்கடித்து அழிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் கடந்த 7-ந்தேதி பிணைக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்ட மக்களும் அந்த அதள பாதாள ஹமாஸ் சாம்ராஜ்ஜியத்தில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், சுரங்கத்தின் மீதான தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு பெரும் சவாலானதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!