கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ளஆனைமலை குப்புச்சிபுதூர் அருகே மேட்டுப்பதி,பாறைப்பதி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க மூன்று இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.மேலும் சுழற்சி முறையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து வனத்துறை வைத்திருந்த கூண்டுக்கு அருகில் வந்த சிறுத்தை, கூண்டின் உள்ளே இருந்த ஆட்டை சாப்பிடாமல் அருகிலேயே படுத்து இருந்து விட்டு பிடிபடாமல் போக்கு காட்டி சென்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாறைப்பதி பகுதியில் மீண்டும் ஒரு கன்று குட்டியை வேட்டையாடி கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். சிறுத்தை சிக்காததால், சிறுத்தையால் வேட்டையாடப்பட்ட ஆட்டின் மீதமிருந்த உடல், உயிருடன் உள்ள ஆடு, மீன், மாட்டு இறைச்சி என வனத்துறையினர் கூண்டில் இரையாக வைக்கப்பட்டிருந்த பொறிகளை மாற்றினர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாறைப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகே உள்ள தனியார் தோட்டத்தில், வைக்கப்பட்டிருந்த கூண்டில் இரையாக உயிருடன் உள்ள கோழி பொறியாக வைக்கப்பட்டது. இன்று இரவு சுமார் 7 மணியளவில் இரை தேடி வந்த சிறுத்தை கூண்டில் உள்ள கோழியை வேட்டையாட முயன்று கூண்டில் உள்ள பொறியில் சிக்கியது. சிறுத்தையை டாப்ஸ்லிப் அடர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்..

