Skip to content

விஜய் இன்னும் ‘அப்டேட்’ இல்லாமல் இருக்கிறார் – அமைச்சர் மகேஸ் பதிலடி

 திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிருபர்களிடம் தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் (School Dropout) விகிதம் குறித்து விஜய் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற த.வெ.க. தலைவர் விஜய், தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டு தி.மு.க. அரசை விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ், அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் காலத்தில் (2017-18) பள்ளி இடைநிற்றல் விகிதம் 16% ஆக இருந்ததாகவும், தற்போது தி.மு.க. ஆட்சியில் அது 7.7% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தகவல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே வெளியானது என்றும், விஜய் பழைய செய்திகளை வைத்து பேசுவதாகவும் விமர்சித்தார். “விஜய் இன்னும் கொஞ்சம் அப்டேட் ஆகணும்” என்று அவர் நேரடியாகக் கூறினார்.

மேலும், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கிய அமைச்சர், “ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளியாவது இந்த அரசில் பயன்பெற்றிருப்பார் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவதாகவும், இதற்கான தரவுகளை மத்திய அரசே வெளியிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றத்துக்கு பெண்களின் மனநிலை மற்றும் ஆதி திராவிட நலக்குழு மனநிலை முக்கிய காரணமாக இருப்பதாகவும், இது தொன்றுதொட்டு தொடர்ந்து வருவதாகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த திராவிட மாடல் அரசை மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் கூறினார்.இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ், விஜய்யின் குற்றச்சாட்டை மறுத்து, தி.மு.க. அரசின் கல்வி சாதனைகளை வலியுறுத்தி பேசினார்.

error: Content is protected !!