Skip to content

மகளிர் மண்டல மாநாடு… கொங்குவை கைப்பற்றும் திமுகவின் பிளான்

தமிழ்நாடு அரசு சார்பில் சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பெயரில் மகளிர் உரிமை தொகை விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்த பெண்கள் கலந்து கொண்டு பேசி இருந்தனர். அது நல்ல வரவேற்பை பெறவே உடனடியாக திமுக கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலும் அதே பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டின் பொறுப்பு செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மாநாடு தொடர்பாக காரணம் பேட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மேற்கு திமுக வின் கோட்டையாகும் என பேசி இருந்தார். அதற்கான பணிகளை மிக தீவிரமாக செய்து வருகிறது திமுக வாக்குச்சாவடிக்கு 10-15 பெண்கள் என 2 லட்சம் பெண்களை மாநாட்டிற்கு அழைத்து வர இலக்கு வைத்து வேலை செய்து வருகிறது திமுக டீம்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெண்களை மையப்படுத்திய நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறது. 1 கோடியே 31 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது, சுமார் 5.5 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு பயணளிக்கும் புதுமை பெண் திட்டம், விடியல் பயணம், தோழி விடுதி, பிங்க் ஆட்டோ என பல்வேறுநலத்திட்டங்களால் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகிறன்றனர். இவற்றை வெளிப்படுத்தும் விதமாக இம்மாநாடு அமையும் என கூறுகிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

இது பற்றி மூத்த அரசியல் விமர்சகர் கூறுகையில் “திமுக மகளிரணி மாநாடு கனிமொழி தலைமையில் கொங்கு மண்டலத்தில் நடத்துவது அதிமுக விற்கு வைக்கிற செக் மேட். அதோட திமுக விற்குள்ள கனிமொழி அதிருப்தி என்றெல்லாம் பரவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டிருக்கு. ஒரே கல்லில ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கார் ஸ்டாலின். செந்தில் பாலாஜி பற்றி சொல்லவே வேண்டாம் நிகழ்ச்சிய பிரம்மாண்டமா நடத்திடுவார். அதிமுக வலுவா இருக்கிற கொங்கு மண்டலத்தில இந்த மாநாடு நிச்சயமா திமுகவிற்கு பிளஸ் தான் அதில எந்த சந்தேகமும் இல்ல” என்றார்.

இந்த மகளிரணி மாநாட்டின் மூலம் பெரிய அளவிற்கு அரசியல் செயல்பாட்டில் ஈட்டுபாடு காட்டாத மகளிரணிக்கு முக்கியத்துவம் கொடுத்து தீவிர தேர்தல் பணியாற்ற வைக்க திமுக தலைமை திட்டமிடுகிறது. மகளிரணிக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தால் திமுக மகளிரணி நிர்வாகிகளும் உற்சாகமாகிவிட்டனர். கொங்கு பகுதியில் பெண்கள் வாக்குகளை முழுவதும் தன் வசப்படுத்த நினைக்கிறது திமுக. கொங்கு மண்டலத்தில் கொடி ஏற்ற தயாராகிவிட்டது திமுக.

error: Content is protected !!