தவெக தலைவர் விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, உடனடியாக U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். இது படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி ஆஷா, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்தார். அந்த நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்த அவர், படத்திற்கு எதிரான புகார்கள் ஆபத்தான போக்கை உருவாக்கும் என்றும், இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்த முடியாது என்றும் கடுமையாக கருத்து தெரிவித்தார். படக்குழு ஏற்கனவே பரிந்துரைத்த மாற்றங்களை செய்துவிட்டதாகவும், தாமதம் தேவையற்றது என்றும் நீதிமன்றம் கருதியது.
இந்த உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே தணிக்கை வாரியம் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தலைமை நீதிபதி அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ள நிலையில், பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.’ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு ஜனவரி 9ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சான்றிதழ் தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அரசியல் உள்நோக்கம் கொண்ட தடை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய விவகாரத்தில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அவர்களுக்கு வலு சேர்த்துள்ளது. தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு முடிவு ரத்து செய்யப்பட்டதால், சான்றிதழ் விரைவில் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.மேல்முறையீட்டு விசாரணை முடிவு எப்படி அமையும் என்பது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு மாற்றினால் மீண்டும் தாமதம் ஏற்படலாம். ஆனால் தனி நீதிபதியின் கடுமையான கருத்துகள் படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளன. ரசிகர்கள் ஆவலுடன் புதிய ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த வழக்கு திரைத்துறையில் கருத்துச் சுதந்திரம் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

