மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள பகத்சிங் நகர், ராஜாராம் தெருவில் இன்று அதிகாலை பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சுமார் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீயானது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் தரைதளம் மற்றும் முதல் தளம் என அனைத்து இடங்களுக்கும் மளமளவெனப் பரவியது. இதில் தரைதளத்தில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு ஆண்களும், மேல் தளத்தில் இருந்த ஒரு பெண்ணும் தீ வளையத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.
தீ எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு வாளிகளில் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்கப் போராடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், வீட்டுக்குள் சிக்கியிருந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர்கள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், பலியானவர்கள் சஞ்சோக் பவாஸ்கர் (48), ஹர்ஷதா பவாஸ்கர் (19) மற்றும் குஷால் பவாஸ்கர் (12) என்பது தெரியவந்தது. நள்ளிரவில் நேரிட்ட இந்தத் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

