பொங்கல் என்றாலே பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் படங்கள், பாக்ஸ் ஆபிஸ் கணக்கு என பரபரப்பாக இருக்கும். ஆனால் அந்த கூட்டத்துக்குள், எந்த பெரிய ஆர்ப்பாட்டமும் இல்லாமல், “நல்ல காமெடி படம் பார்த்து ரிலாக்ஸா சிரிக்கலாம்” என்று நினைப்பவர்களுக்கான ஒரு சின்ன பட்ஜெட் சர்ப்ரைஸாக வெளியாகி இருக்கிறது ஜீவா நடிப்பில் உருவான ‘தலைவர் தம்பி தலைமையில் (TTT)’.
மலையாளத்தில் பேசில் ஜோசப் நடித்த ‘Falimy’ என்ற பக்கா காமெடி-டிராமா படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ், அதே நகைச்சுவை உணர்வை தமிழிலும் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளத்துடன், குறைந்த பட்ஜெட்டில் நல்ல எண்டர்டெயின்மெண்ட் கொடுத்திருக்கிறதா? என்பதை பார்ப்போம்.
டீசரிலேயே கவனம் ஈர்த்த டயலாக்
“படிச்சு படிச்சு சொன்னேன்னே… கேட்டீங்களா?” என்ற வசனத்துடன் வெளியான அறிமுக டீசரே இந்த படத்தின் மீது ரசிகர்களின் கவனத்தை திருப்பியது. வெளிப்படையான அரசியல் விமர்சனம் இல்லாமல், கிராம அரசியலை நகைச்சுவையாக சொல்லும் முயற்சி டீசரிலேயே தெரிந்தது.
சமீப காலமாக ஜீவா, வித்தியாசமான கதைகளையும் புதிய இயக்குநர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில், ‘தலைவர் தம்பி தலைமையில்’ அவருக்கான இன்னொரு சரியான தேர்வாக அமைந்திருக்கிறது.
தலைவர் தம்பி தலைமையில் – கதை
ஒரு கிராமமத்தில் ஒரு வீட்டில் கல்யாணம் நடக்க ஏற்பாடுகள் ஜோராக நடைபெறுகிறது.
அதே நேரத்தில், பக்கத்து வீட்டில் ஒரு தாத்தா திடீரென காலமாகிவிடுகிறார். மணமகள் வீட்டார்,
“நாளை காலை 10.30 மணிக்கே கல்யாணம் நடக்கணும்” என்று உறுதியாக நிற்கிறார்கள்.
இழவு வீட்டார்,”இறுதி ஊர்வலம் நடந்தே ஆகணும்” என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.
இந்த இரண்டு தரப்புக்கும் நடுவில் சிக்கிக் கொள்கிறார் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவரான ஜீவா. தேர்தல் நெருங்கும் நேரம். நல்ல பெயர் வாங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில், கல்யாணத்தை முன்னின்று நடத்த முயற்சி செய்யும் ஜீவா, பிரச்சனையை தீர்த்தாரா? இல்லை, அதிலேயே சிக்கி மேலும் குழப்பத்தை உருவாக்கினாரா? என்பதுதான் படத்தின் மையக் கதை.
ஒரே கிராமம், ஒரே இரவு, ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து, அரசியல் நய்யாண்டியும் குடும்ப காமெடியும் கலந்த ஒரு திரைக்கதை.
படம் எப்படி இருக்கு
ஜீவாவின் பழைய ஹிட் படமான ‘சிவா மனசுல சக்தி’யில் இருந்த வேகம், உடல் மொழி, டைமிங் காமெடி – இதையெல்லாம் இந்த படத்தில் மீண்டும் பார்க்க முடிகிறது. படம் முழுவதும் அவர் ஒரே காஸ்ட்யூமான வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியில் வருவது கதைக்கு கூடுதல் நம்பகத்தன்மை கொடுக்கிறது.
கதையின் நாயகி என்று பார்த்தால், திருமணம் ஆகப்போகும் மணப்பெண் பிரார்த்தனாதான். தம்பி ராமைய்யாவின் மகளாக வரும் அவர், கதையின் மையப் புள்ளியாக இருக்கிறார். மார்த்தாண்டத்தில் இருந்து வரும் மாப்பிள்ளை தரப்பு, அவர்களின் உறவினர்கள், ஊர் பெரியவர்கள் என ஒவ்வொரு கேரக்டரும் காமெடிக்கு சரியான பங்காற்றுகிறார்கள்.
தம்பி ராமையா – இளவரசு இடையிலான ஈகோ மோதல், கிராமத்து அரசியல் சூழல், சிறிய விஷயங்கள் பெரிய பிரச்சனையாக மாறும் தருணங்கள் என அனைத்தையும் நிதிஷ் சகாதேவ் நகைச்சுவையுடன் கையாள்கிறார்.
ஜென்சன் திவாகர் – படத்தின் பெரிய பலம்
‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ போன்ற படங்களில் காமெடி நடிகராக கலக்கிய ஜென்சன் திவாகர், இந்த படத்தில் ஜீவாவுக்கு எதிரான அரசியல் போட்டியாளராக வருகிறார். ‘தவிடு’ என்ற கேரக்டரில்

அவர் செய்யும் அலப்பறை, டைமிங் காமெடி தான் ரசிகர்களை அடிக்கடி சிரிக்க வைக்கிறது.
ஜெய்வந்த் நடித்த சண்டைக்கு இழுக்கும் கேரக்டரும் கதைக்கு நல்ல வேகம் கொடுக்கிறது.
தொழில்நுட்ப ரீதியான அம்சங்கள்
விஷ்ணு விஜய்யின் இசை, காமெடி காட்சிகளுக்கு சரியான பின்னணி இசையாக அமைந்துள்ளது. பாடல்கள் அதிகம் இல்லாமல், கதைக்கு தேவையான இடங்களில் மட்டும் இசையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பப்லு அஜுவின் ஒளிப்பதிவு கிராம சூழலை இயல்பாக காட்டுகிறது. ஒரே நாள், ஒரே இரவில் நடைபெறும் கதையையும் கண்ணுக்கு சலிப்பு இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எடிட்டர் அர்ஜுன் பாபு, 1 மணி 55 நிமிடத்தில் படத்தை டைட்டாக செதுக்கியிருப்பது பெரிய பிளஸ். எங்கும் தேவையற்ற இழுவை தெரியவில்லை.
ஜீவாவின் எனர்ஜியான நடிப்பு, கிராம அரசியலை காமெடியாக சொல்லிய விதம், ஜென்சன் திவாகரின் கலகலப்பான நடிப்பு, நாகர்கோவில் ஸ்லாங், குறைந்த பட்ஜெட்டிலும் நல்ல புரொடக்ஷன் வால்யூ, குடும்பத்தோடு பார்க்க ஏற்ற சுத்தமான காமெடி. ஜீவாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

