Skip to content

தவெக 3-வது ஆண்டு தொடக்க விழா: தொண்டர்களுடன் மேடையில் நடனமாடி அசத்திய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா, சென்னை அடுத்த பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார். விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முருகன் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல்கள் இசைக்கப்பட்டன.

மேடையில் பிரபல நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன், விஜய்யை வாழ்த்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அவர் பாடி முடித்ததும் மேடை ஏறிய விஜய், அவருக்குச் சால்வை அணிவித்துக் கௌரவித்தார். அப்போது பாடகர் வேல்முருகன், விஜய்க்கு அறுபடை வீடு முருகனின் திருவுருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். தொடர்ந்து, மேடையில் நடனமாடத் தான் விரும்புவதாகத் தெரிவித்த விஜய், அதற்காக ஒரு பாடலைப் பாடுமாறு வேல்முருகனிடம் கேட்டுக் கொண்டார்.

விஜய்யின் இந்த திடீர் கோரிக்கையால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். உடனே வேல்முருகன், “தளபதி.. தளபதி வாழ்க.. நம்ம வெற்றிக்கொடி எப்பவுமே வாழ்க” என்ற பாடலைப் பாடிக்கொண்டே ஆடத் தொடங்கினார். அவருடன் ஒரு சிறுமியும் இணைந்து ஆட, உற்சாகமான விஜய்யும் அவர்களுடன் சேர்ந்து மேடையில் நடனமாடி அசத்தினார். விஜய்யின் நடனத்தைப் பார்த்த தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். கட்சியின் 3-வது ஆண்டு விழாவில் தலைவர் விஜய் தொண்டர்களுடன் இணைந்து ஆடிய இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!