Skip to content

டி.என்.பி.எஸ்.சி. அதிரடி அறிவிப்பு: மார்ச் 15-ல் குரூப்-2 மறுதேர்வு – ஹால் டிக்கெட் எப்போது?

தமிழகத்தில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெறவிருந்த குரூப்-2 மற்றும் 2A முதன்மைத் தேர்வுகள் வினாத்தாள் குளறுபடி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டன. இதனால் தேர்வர்கள் பெரும் ஏமாற்றமடைந்த நிலையில், தற்போது மறுதேர்வுக்கான கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.

புதிய தேர்வு அட்டவணை: அதன்படி, வரும் மார்ச் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு தாள்களுக்கான தேர்வுகளும் நடைபெறும்:

  • முற்பகல்: தொகுதி-2 A க்கான பொது அறிவு மற்றும் நுண்ணறிவுத் தேர்வு (OMR முறை).
  • பிற்பகல்: தொகுதி-2 மற்றும் 2A க்கான தமிழ் மொழி தகுதித் தேர்வு (விரிந்துரைக்கும் வகை).

இந்தத் தேர்விற்கான புதிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) வரும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் தங்களது ‘ஒருமுறை பதிவு’ (OTR) எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள் தேர்வர்களின் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திக்கும் அனுப்பி வைக்கப்படும்.

இதற்கிடையே, வரும் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-2 முதன்மைத் தேர்வு) திட்டமிட்டபடி அதே தேதியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!