த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது.
நடிகை திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சி தலைவர் இப்படி பேசலாமா என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. சுதா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திரிஷா தொடர்பான கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தனிப்பட்ட முறையில் யார் மனதும் புண்படும் வகையில் பேசமாட்டேன் என்றார்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை த்ரிஷா பதிவு வெளியிட்டுள்ளார். “மரியாதை குறைவான செயல்கள் எப்போதும் தட்டிக்கேட்கப்பட வேண்டியவை” என்று குறிப்பிட்டு தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மாநில அரசியலில் உயரிய பதவியில் இருக்கும் ஒரு நபர், இவ்வளவு கீழ்த்தரமான மற்றும் பொருத்தமற்ற கருத்தைத் தெரிவிப்பார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
நான் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல, எதிர்காலத்தில் அப்படி இணையும் எண்ணமும் அவருக்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கடந்த காலங்களைப் போலவே அரசியலில் எப்போதும் நடுநிலை வகிப்பதையே விரும்புகிறேன்.
எனது நடிப்புத் திறமையால் அடையாளம் காணப்பட விரும்புகிறேன். அரசியல் அடையாளம் எனக்கு தேவையில்லை. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசக்கூடாது என்பது பொதுவான நியதி. உயர் பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனக்கு தொடர்பில்லாத விவகாரங்களில் எனது பெயரை இழுக்க வேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளார்.

