Skip to content

இந்தியாவில் டிஜிட்டல் யுகத்தில் புதிய சட்டம்– வயது அடிப்படையிலான கட்டுப்பாடு?

 சமூக வலைதளங்களின் வளர்ச்சி இன்று மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. பெரும்பாலானோர் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அனைத்தையும் ஆட்கொண்டுள்ளது. இதில் நன்மை தரும் பல அம்சங்கள் இருந்தாலும், ஆபத்தான விஷயங்களும் மிக அதிகம் உள்ளன. குறிப்பாக சிறார்கள் இத்தகைய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களில் சிக்கி விடும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது உலகம் முழுவதும் கவலை அளிக்கக்கூடிய பிரச்சினையாக மாறியுள்ளது.இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆஸ்திரேலியா நாடு முன்னோடியாக செயல்பட்டுள்ளது.

ஏனென்றால், அந்நாட்டில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சிறுவர்களின் மன ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் முதன்மைப்படுத்தும் இந்த நடவடிக்கை பல நாடுகளுக்கு முன்மாதிரியாக உள்ளது.இந்த நிலையில் இந்தியாவிலும் ஆஸ்திரேலியா போன்ற வயது அடிப்படையிலான கட்டுப்பாட்டை கொண்டு வரலாமா என மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதை உறுதிப்படுத்தியுள்ளார். “வயது அடிப்படையிலான கட்டுப்பாடு பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பகுதியாகும். தற்போது பல்வேறு சமூக வலைதளங்களுடன் ‘டீப் ஃபேக்’குகள் மற்றும் வயது கட்டுப்பாடு குறித்து நாங்கள் பேசி வருகிறோம். இது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் பிரச்சினை. இதிலிருந்து குழந்தைகளையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் நிச்சயமாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அதே சமயம், குழந்தைகளை சமூக ஊடகங்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் பேசிய அவர், “குழந்தைகளைப் பாதுகாப்பது ஒழுங்குமுறை அல்ல, நாகரிகம்” என்று வலியுறுத்தினார். குழந்தைகளை டிஜிட்டல் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் முயற்சிகளுக்கு உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!