Skip to content

மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக மேலும் 49 புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 26 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நடைமேடை 10 மற்றும் 11-ல் கடந்த 20ம் தேதிமுதல் மறுசீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக ஏப்ரல் 5 வரை 45 நாள்களுக்கு புறநகர் ரயில்கள் நடைமேடை 5 மற்றும் 5-ல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 204 மின்சார ரயில் சேவைகளை 154 ஆகக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி கடந்த 4 நாள்களாக இயக்கப்பட்டு வந்தன. இதனால், சென்னை புறநகர்ப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் பணிக்குச் சென்று திரும்பும் லட்சக்கணக்கானோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தேர்வு காலத்தில் மாணவர்களும் நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலும், சிக்னல் கிடைக்காமல் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தாமதமாகவும் இயக்கப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை கடற்கரை செங்கல்பட்டு வழித்தடத்தில் 49 ரயில் சேவைகளை இன்றுமுதல் குறைப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால், சென்னை புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!