கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உலகப்புகழ் பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ‘புன்னகை மன்னன்’, ‘பாகுபலி’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் படமாக்கப்பட்ட இந்த நீர்வீழ்ச்சிக்குத் தமிழ்நாடு, கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இன்று சுற்றுலா பயணிகள் அருவி அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கயிறுகள் உதவியுடன் 15-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். நீர்வரத்து அபாய கட்டத்தைத் தாண்டி உள்ளதால், மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்கவும், அருவி அருகே செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
