திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள், ‘பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2026ல் பாஜகவைச் சேர்ந்தவர்கள் தமிழக அமைச்சராக பொறுப்பு ஏற்பார்கள் என தெரிவித்துள்ளாரே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், ‘இறைவன் அனுமதித்தால் எடப்பாடியார் தலைமையில் சட்டசபை உறுப்பினர்களாக ஆவார்கள். இறைவன் அனுமதித்தால் சிலர் அமைச்சர்களாக ஆவார்கள்.
நயினார் நாகேந்திரன் அவரது விருப்பத்தை சொல்லியுள்ளார். பாஜக-அதிமுக கூட்டணிக்கு தமிழகத்தில் எடப்பாடி தான் தலைமை என்பதை தெளிவாக சொல்லியுள்ளனர். இதில், எந்த குழப்பமும் இல்லை. 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடியார் முதலமைச்சர் ஆவார்’ என்றார். பெங்களூர் சிறையில் இருந்து சென்னை சிறைக்கு என்னை மாற்றியிருந்தால், அன்றே என்னை கொன்று இருப்பார்கள் என சசிகலா கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘குற்றச்சாட்டு யார் மீது சொல்லி உள்ளாரோ, அவர்களிடம் தான் கேட்க வேண்டும்’ என்றார். நான் தான் தமிழ்நாடு, நான் இல்லை என்றால் தமிழ்நாடு இல்லை என விஜய் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, ‘தேர்தலுக்குப் பிறகுதான் இதற்கு விடை தெரியும். தற்பொழுது தான் கட்சி ஆரம்பித்துள்ளார், குழந்தை தவழ்கிறது; வரட்டும் பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

