சென்னையில் கல்லூரி முடிந்து உறவினரைப் பார்க்க சென்ற மாணவர், லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்த அப்துல் சத்தார் என்பவரின் மகன் முகம்மது அலி இம்தியாஸ் (18). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ஆம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்து, செங்குன்றத்தில் உள்ள தனது உறவினரைப் பார்ப்பதற்காக மதுரவாயல் – புழல் பைபாஸ் சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
கதிர்வேடு அடுத்த சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே அவர் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த டிரெய்லர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவர் மீது லாரியின் சக்கரம் ஏறியது. ரத்த வெள்ளத்தில் துடித்த முகம்மது அலி இம்தியாஸ் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், மாணவரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில்குமார் (46) என்பவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

