தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் முழுவதும் மக்கள் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் மிக விமரிசையாக நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்ட திமுக சார்பில், மாவட்டம் முழுவதிலும் உள்ள சுமார் 225 இடங்களில் இந்த விழா கொண்டாட்டங்களுக்குப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கி வருகின்றனர். விழாவின் ஒரு பகுதியாக, வெண்ணமலையில் உள்ள அன்புக்கரங்கள் காப்பகத்தில் ஆதரவற்றோருக்குக் காலை உணவு வழங்கப்பட்டது.
அதேபோல், வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்வில் சுமார் 6,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

