உப்பு சத்தியாகிரகத்தின் போது மகாத்மா காந்தி குஜராத்தில் தண்டி யாத்திரை நடத்தினார். அதேநாளில் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
ராமாயணத்திலும் வேதாரண்யம் முக்கிய பங்கு வகிக்கிறது. இலங்கையில் சீதாபிராட்டி இருக்கிறாரா என்பதை வேதாரண்யத்தில் இருந்து ராமபிரான் பார்த்ததாக நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில் வேதாரண்யம் செல்லும் வழியில் ராமர் பாதம் அமைந்திருக்கிறது. இவ்வாறு வரலாற்று ரீதியாக வேதாரண்யம் பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்ட பகுதி.
அதேபோல் உப்பு உற்பத்தியில் தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யம் 2-ம் இடத்தில் உள்ளது. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம், உப்பு உற்பத்தி, மீன்பிடி மற்றும் மல்லிகைப்பூ சார்ந்த தொழிலாக உள்ளன.
இங்கு அதிகளவில் வன்னியர்கள் (கவுண்டர்கள்) இனத்தவர்கள் வசிக்கின்றனர். அடுத்தபடியாக அகமுடையர்கள், ஆதிதிராவிடர்கள், முத்தரையர்கள், யாதவர்கள் மற்றும் இதர சமூகத்தினர் உள்ளனர்.
தமிழ்நாட்டில் முதல் சட்டசபை தேர்தலான 1952 முதல் 1967 வரை தொடர்ந்து 4 முறை காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதி, 1971-ல் முதன்முதலாக திமுக வசமானது. அன்று முதல் வேதாரண்யத்தை பொறுத்தவரை அது இன்றளவும் திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 1996,2001,2006 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற எம்எல்ஏ வேதரத்தினத்திற்கு 2011-தேர்தலில் சீட் கொடுத்தால் தன்னை விட வளர்ந்து விடுவார் என்ற எண்ணத்தில் அப்போதைய நாகை மாவட்ட திமுக செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வேதாரண்யம் தொகுதியை 2011-ம் ஆண்டு திமுக கூட்டணி கட்சியான பாமகவுக்கு தள்ளி விட்டார். அதனால் அதிருப்தி அடைந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.கே. வேதரத்தினம் சுயேட்சையாக போட்டியிட்டு 2-வது இடத்தைப் பெற்று தோல்வியடைந்தார். இதில் திமுகவின் கூட்டணி கட்சியான பாமக தோல்வியுற்றது. எஸ். கே.வேதரத்தினமும் தோல்வியடைந்தார். அப்போது வேதாரண்யம் தொகுதி அதிமுக கைவசம் சென்றது.
தொடர்ந்து 15 ஆண்டுகள் முடி சூடா மன்னனாக இருந்த எஸ்.கே. வேதரத்தினம் அதன்பின் பாஜக பக்கம் நகர்ந்துவிட்டார். இவருடைய தனி செல்வாக்கை பார்த்த பாஜக கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. அப்போது அவரை ஆதரித்து ஓட்டு சேகரிக்க பாரத பிரதமர் மோடி அவர்களே வேதாரண்யம் தொகுதிக்கு வருகை தந்தார் என்பது முக்கியத்துவம் ஒன்றாகும். அந்த தேர்தலில் அவரும் தோற்று, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பி.வி. ராஜேந்திரனின் தோல்விக்கும் காரணமாக இருந்தார். இதனால் அதிமுக வேட்பாளர் ஓ. எஸ்.மணியன் அந்த தேர்தலில் சுலபமாக வென்று அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
அதன்பின் 2021 தேர்தல் காலகட்டத்தில் எஸ். கே.வேதரத்தினம் மீண்டும் திமுகவில் சேர்ந்ததால், 15 ஆண்டுகள் தொடர்ந்து எம்எல்ஏ ஆக சீனியரான இவரை மீண்டும் வேட்பாளராக நிறுத்தினால் சரியாக இருக்கும் என கணித்து திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் 2011-ல் கட்சிக்கு எதிராக போட்டி, 2016-ல் பாஜக வேட்பாளர் என குழப்பமான முடிவெடுத்ததால் வேதரத்தினத்திற்கு மக்கள் வெற்றியை தரவில்லை. மீண்டும் வென்றார் அதிமுகவின் ஓ.எஸ் மணியன். இதன் மூலம் தான் வேதாரண்யம் தொகுதி அதிமுக வசம் சென்றது.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் சீட் ரேஸில் இம்முறையும் இருக்கிறார் எஸ். கே.வேதரத்தினம். கட்சி மாறி சென்று வந்ததால் உட்கட்சியிலேயே நிர்வாகிகளும் தொண்டர்களும், அவருடைய சமூகத்தினரும், நடுநிலையாளர்களும் அவர் மீதான அதிருப்தி இருந்து வருகிறது.
இந்த தொகுதியின் கடந்த காலங்களில் அகமுடையர் சமூகத்தை சேர்ந்தவர்களே 10 முறை சட்டமன்ற உறுப்பினர்களாக வென்றுள்ளனர். அதே சமூகத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் தான் அகமுடையர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியனை வீழ்த்த முடியும் என்பதே அந்த கணக்கு.
அந்த வகையில் திமுகவில் தற்போதைய வேதாரண்யம் நகர திமுக செயலாளரும், நகர் மன்ற தலைவருமான புகழேந்தி திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு மூலம் நிச்சயம் சீட் வாங்கி விடுவேன் என்று கூறி வருகிறார்.
அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்போதைய தமிழ்நாடு அரசு டெல்லி பிரதிநிதிமான ஏ.கே. எஸ்.விஜயனின் ஆதரவாளரான தலைமை செயற்குழு உறுப்பினரும், தலைமை கழக வழக்கறிஞருமான சீ.க.மறைமலை திமுகவின் முதன்மை செயலாளரான கே. என்.நேரு மூலம் காய் நகர்த்தி வருகிறார். ஆனால் தொகுதி வட்டாரத்தில் மறைமலையின், சொந்த ஊர் வேதாரண்யம் என்றாலும் தற்போது அவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் குடியேறி வசித்து வருவதால் தொகுதி மக்களிடையே அறிமுகம் இல்லை என்ற கருத்து நிலவுகிறது.
இவர்கள் இருவர் மட்டும் இல்லாமல் தற்போதைய நாகை திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் ஆதரவுடன் நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாரி பாலன் அவர்களும் இந்த ரேஸில் உள்ளார். இவர்கள் மூவருமே அகமுடையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
துணை முதல்வரும், திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அண்மைக்காலமாக மேடை தோறும் திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் வேதாரண்யம் தொகுதியில் இளைஞரான வழக்கறிஞர் பாரிபாலனுக்கு போட்டிக்களத்தில் அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை தங்கள் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் இடும்பாவனம் கார்த்தி என்னும் இளைஞரையே வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான ஓ.எஸ்.மணியனே மீண்டும் களம் காண்கிறார்.
திமுக, அதிமுக இடையேயான ரேசில் முந்தப் போவது யார் என்பதை விட, அதிமுகவும் நாம் தமிழர் கட்சியும் அகமுடையர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை உறுதி செய்து விட்ட நிலையில் திமுக வேட்பாளர் யார்? என்ற கேள்வி பரவலாக பேசப்பட்டு வருகிறது.
வேதாரண்யம் தொகுதிக்கான ஒன் டு ஒன் சந்திப்பின் போது கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த முறை வேதாரண்யம் தொகுதியை வென்றெடுத்தாக வேண்டும் என்ற கட்டளையை பிறப்பித்துள்ளார். இந்த கட்டளையை நிறைவேற்ற உட்கட்சி கோஷ்டி பூசலை சமாளிக்க பாரிபாலனே நல்ல சாய்சாக இருப்பார் என்று பரவலாக பேசப்படுகிறது.
இந்தத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்பதை அறிய தொகுதி மக்களுடன் ஆர்வமுடன் உள்ளனர்.

