அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரத்தில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து
பொதுமக்கள் எரிவாயு குடோன் முன்பு முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போர் காரணமாக இந்தியா முழுவதும் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் உணவகங்கள் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சர்வர் கோளாறு காரணமாக செல்போன் மூலம் சிலிண்டர் பதிவு செய்வதிலும் பொதுமக்கள் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜபுரம் பகுதியில்
எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய முடியாதவர்கள் மற்றும் ஏற்கனவே பதிவு செய்து சிலிண்டர் கிடைக்க காத்திருப்போர் காலியான சிலிண்டர்களை கொண்டு வந்து எரிவாயு கம்பெனி குடோன் முன்பு வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டில் உள்ள காலி சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு வந்து
குடோன் முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து ஊழியர்கள் பொதுமக்களிடம் தற்போது லோடு வராததால் விநியோகம் செய்ய முடியவில்லை, சிலிண்டர் வந்தவுடன் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் வீட்டில் சமைப்பதற்கே சிலிண்டர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் ராஜபுரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரவக்குறிச்சி மற்றும் ராஜபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் சிலிண்டர் இணைப்புகள் உள்ளதாகவும், எரிவாயு விநியோகத்தை உடனடியாக சீர்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

