திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா ( 44). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெடுங்கூர் கட் ரோடு அருகே அவர் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மகாராஜா ரத்த வெள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மகாராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி தமிழ்செல்வி சிறுனுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த வினோத் (42) என்பவர் ஓட்டி வந்த கார் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் மோதியதே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

