Skip to content

வால்பாறையில் சோகம்: 3-வது கொண்டை ஊசி வளைவில் கார் மோதி கேரள சுற்றுலாப் பயணி பலி

கோவை மாவட்டம் வால்பாறை மலைச்சாலையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து வால்பாறையைச் சுற்றிப் பார்ப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் ஒரு காரில் வந்திருந்தனர். வால்பாறையில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களைப் பார்த்துவிட்டு, இன்று அவர்கள் மீண்டும் பொள்ளாச்சி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். வால்பாறையை அடுத்த அட்டகட்டி பகுதியில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

வேகமாகச் சென்ற கார் அங்கிருந்த மரத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த 50 வயதான ஜோனி ஜேக்கப் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் காரில் பயணம் செய்த ஜோகி தாமஸ், 46 வயதான மூலம்மாள் மற்றும் 19 வயதான ஆல்பட் ரோஷினி ஆகிய மூவருக்கும் கை, கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது.

விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியே வந்த மற்ற வாகன ஓட்டிகள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், படுகாயமடைந்த மூவரையும் மீட்டுப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஜோனி ஜேக்கப்பின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காடம்பாறை காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக வால்பாறை – பொள்ளாச்சி மலைச்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!