பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவிற்கு உட்பட்ட அந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிஷா. இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் வேறு வேறு சமூகங்களை சேர்ந்ததால் ஸ்ரீநிஷாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி முத்து மற்றும் ஸ்ரீநிஷா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து பாதுகாப்பு கேட்டுள்ளனர்.
முறைப்படி வழக்கு பதிவு செய்த குன்னம் காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து, இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ உரிமை உண்டு என்பதை எடுத்துக்கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று அரியலூர் மாவட்டம் கல்லக்குடியில் உள்ள முத்துவின் உறவினர் முருகன் என்பவரது வீட்டிற்கு விருந்து உபசரிப்புக்காக முத்து – ஸ்ரீநிஷா தம்பதியினர் வந்துள்ளனர். விருந்து முடித்து மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான அந்தூர் கிராமத்திற்கு செல்ல அரியலூர் பேருந்து நிலையம் வந்துள்ளார்.

இவர்கள் வருவது குறித்த தகவல் அறிந்த ஸ்ரீநிசாவின் உறவினர்கள், காரில் அரியலூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்து முத்து மற்றும் ஸ்ரீநிஷா இருவரையும் பிரித்து தங்களது காரில் ஏற்றிச் செல்ல முயன்றுள்ளனர். இதற்கு முத்து எதிர்ப்பு தெரிவிக்கவே, ஸ்ரீநிஷாவை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு காரை ஓட்ட தொடங்கியுள்ளனர்.

உடனடியாக காரில் ஏறிக்கொண்ட முத்து கார் கதவுகளை மூடாமல் திறந்து பிடித்தபடியே அரியலூர் நகர வீதிகளில் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் கடைவீதியில் கூச்சலிட்டபடியே சென்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து காரை மடக்கி பிடித்தனர்.
பொது மக்களுக்கு நடப்பது என்னவென்று தெரியாமல் குழம்பி நின்ற சூழலில், முத்து மட்டும் சாலையில் நின்றபடியே தனது மனைவியை பிரித்து அழைத்துச் செல்வதாக கூக்குரலிட்டு கொண்டிருந்தார். அப்பொழுது ஸ்ரீநிஷாவின் உறவினர்கள், அவரை காருக்குள்ளேயே இழுத்து பிடித்து வெளியே செல்ல விடாமல் பிடித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு வழியாக அரியலூர் காவல் துறையினர் வந்து ஸ்ரீநிஷாவை மீட்டு அரியலூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் காரை பறிமுதல் செய்ததோடு, அதில் வந்திருந்த ஸ்ரீநிஷா உறவினர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப் பகலில் கடைவீதி பகுதியில் காதல் மணம் புரிந்த பெண்ணை, அவரது உறவினர்களே வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் செல்ல முயன்ற சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
