Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான இலவச மகளிர் பயணம்

ராணிப்பேட்டை : மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விடியல் பயணம் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயணடைந்துள்ளனர்.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணச் சலுகை வழங்கும் ‘விடியல் பயணம்’ திட்டம், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இத்திட்டம், பெண்களின் பயணச் சுதந்திரத்தை உறுதி செய்வதோடு, அவர்களின் குடும்ப பொருளாதாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம், சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க வழிவகை செய்கிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை (மார்ச் 2026 நிலவரப்படி) சுமார் 897.82 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாள்தோறும் சுமார் 50 லட்சம் முதல் 57 லட்சம் பெண்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் விகிதம் 40 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் ‘விடியல் பயணம்’ திட்டத்தின் மூலம் 9 கோடி பேர் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இதற்காக ரூ.136 கோடி செலவிடப்பட்டுள்ளது.மாநில திட்ட குழுவின் ஆய்வின்படி, இத்திட்டத்தின் மூலம் ஒரு பெண் மாதம் சராசரியாக ரூ.888 வரை சேமிக்கிறார்.

இந்த சேமிப்பு தொகை பெண்களின் மாத வருமானத்தில் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை ஆகும். மிச்சமாகும் இந்த பணம் குழந்தைகளின் கல்வி, சத்தான உணவுகள் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மறைமுகமாக மாநிலத்தின் மனித வள மேம்பாட்டிற்கு வலுசேர்க்கிறது.

இத்திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்த தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுதோறும் பெரும் தொகையை மானியமாக வழங்கி வருகிறது. 2024-25 நிதியாண்டில் ரூ.3,050 கோடியும், 2025-26ம் நிதியாண்டில் ரூ.3,600 கோடியும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட 2021 முதல் 2024 வரை மட்டும் அரசு மொத்தம் ரூ.6,788 கோடி மானியமாக வழங்கியுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு, பெண்களின் பயணச் சீட்டுக்கான கட்டண இழப்பை ஈடுகட்டி, போக்குவரத்து கழகங்களின் டீசல் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசின் இந்த ‘விடியல் பயணம்’ திட்டம், வெறும் இலவசப் பயண சலுகை மட்டுமல்ல, இது பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும், சமூக அந்தஸ்தையும் உயர்த்தும் ஒரு வலுவான கருவியாக திகழ்கிறது.

தமிழகத்தை பின்பற்றும் மாநிலங்கள்

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களை இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அதன்படி தமிழகத்தின் ‘விடியல் பயணம்’ திட்டத்தின் மாபெரும் வெற்றியையும், அதன் மூலம் பெண்களுக்கு கிடைத்த பொருளாதார பலன்களையும் ஆய்வு செய்த பின்னர் கர்நாடகா மாநிலத்தில் 2023ம் ஆண்டு ‘சக்தி’ என்ற பெயரில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அம்மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். தெலுங்கானாவில் 2023ம் ஆண்டு ‘மகாலட்சுமி’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆந்திராவில் சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் ‘ சக்தி’ என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தின் விடியல் பயணம் திட்டம் ஒரு ‘திராவிட மாடல்’ வளர்ச்சிக்கான சிறந்த உதாரணமாகக் கருதப்பட்டு, மற்ற மாநிலங்களால் உற்று நோக்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள் மற்றும் விரிவாக்கம்

இலவச பயணம் மேற்கொள்ள மகளிர் எளிதில் கண்டறியும் வகையில், சாதாரண கட்டணப் பேருந்துகளின் முன்பும் பின்பும் இளஞ்சிவப்பு (பிங்க) நிறம் பூசப்பட்டுள்ளது. சமவெளிப் பகுதிகளில் மட்டுமல்லாது, தற்போது நீலகிரி (ஊட்டி), கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பிரதேசங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பெண்களுக்குப் பெரும் உதவியாக உள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாக கணக்கிட, பெண்களுக்கு பூஜ்ஜிய கட்டண பயணச்சீட்டு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருநங்கையருக்கான முக்கியத்துவம்

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த திருநங்கையரை அங்கீகரிக்கும் வகையில், ‘விடியல் பயணம்’ திட்டம் அவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை திருநங்கையர் சுமார் 36.89 லட்சம் முறை இலவசப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

பயணச் செலவு குறைந்ததால், திருநங்கையர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக எளிதாகப் பயணம் செய்ய முடிகிறது. இது அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

error: Content is protected !!