திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குண்டூர் – புதுக்கோட்டை மெயின் ரோட்டில் (திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே), கனிமவளத்துறை அதிகாரிகள் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, லாரியை ஓட்டி வந்த திருவெறும்பூர் தாலுகா, துவாக்குடி மலை தெற்கு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், மணப்பாறை அடுத்த வையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துப்பாரி – வடக்கு அம்மாபட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கே சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அங்கிருந்த டிப்பர் லாரி மற்றும் மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 4 யூனிட் கிராவல் மணலும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வடக்கு அம்மாபட்டியைச் சேர்ந்த திருப்பதி (37), அண்ணா நகரைச் சேர்ந்த தெக்கமலை (36), மணப்பாறையைச் சேர்ந்த பால்ராஜ் (40), ஜே.சி.பி டிரைவர் சுரேஷ் மற்றும் உரிமையாளர் அழகர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

