தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. வருகிற 6-ந்தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை துணை செயலாளர் ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இதனிடையே கடந்த 30-ந்தேதி ஜான்சி ராணி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது ஜான்சி ராணி திமுகவுக்கும், திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் திமுக வேட்பாளரை மக்கள் ஆதரித்தால் தனக்கு சந்தோசம் என்றும் பேட்டியளித்துள்ளார்.
இந்த நிலையில் பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜான்சி ராணி மாற்றப்பட்டுள்ளார். அக்கட்சி சார்பில் புதிய வேட்பாளராக சுகன்யா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சுகன்யா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

