Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவில்பட்டியில் கோர விபத்து: லாரி மோதி புதுமணத் தம்பதி பலி

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதியதில் புதுமண தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (32). இவரது மனைவி மனிஷா (20). இவர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. மனோகரன் சாத்தூரில் உள்ள தனியார் அட்டை கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு கணவன், மனைவி இருவரும் பைக்கில் கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு மனைவி மனிஷாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்து விட்டு இருவரும் பைக்கில் மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கோவில்பட்டி – சாத்தூர் சாலையில் தனியார் கல்லூரி அருகே பைக் சென்ற போது சிவகாசியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி, பைக் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மனோகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த மனிஷா படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மனோகரன் உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மனிஷாவுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர், இறந்தார்.

விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்த அபூபக்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமண தம்பதி விபத்தில் சிக்கி பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!