சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் ஏப்.21, 22, 23 (வாக்குப்பதிவு நாள்), 04.05.2026 (வாக்கு எண்ணிக்கை நாள்) ஆகிய நாட்களில் மூடப்படும்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12(2)ன்படி உரிமம் பெற்று இயங்கி வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள்,
அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் FL-2 முதல் FL-11 வரை (FL-6 தவிர) உரிமம் பெற்ற உரிமதலங்கள் அனைத்தும் பிப்.21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான பிப்.23ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதி (திங்கட்கிழமை) ஆகிய 4 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
