இடதுசாரிகள் மற்றும் விசிக முக்கிய அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கார்ல் மார்க்ஸ் 208வது பிறந்த தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள கன்னிமரா பொது நூலகத்தில் அமைந்துள்ள சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் மேதை கார்ல் மார்க்ஸ் நினைவுகூருவோம். அவர் தத்துவத்தை உழைப்பாளர் வர்க்கத்திற்குக் கொண்டு செல்வோம் என இந்த நேரத்தில் உறுதியேற்கிறோம்.
தேர்தல் முடிவின்படி திமுக தலைமையிலான கூட்டணியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதிமுக பாஜக தலைமையிலான சங்பரிவார அரசியலை வீழ்த்தியுள்ளது. அந்த வகையில் நாங்கள் முன்னெடுத்த முயற்சி வெற்றி பெற்றதாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக வாக்களித்த தமிழ் மக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வரும் 7ம் தேதி சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறங்களிலும், மாவட்டங்களிலும் இடதுசாரி கட்சிகளுடன் விசிக இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிலைப்பாட்டைக் கண்டித்து, குறிப்பாக கேஸ் விலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இடதுசாரிகள் மற்றும் விசிக நீண்ட காலமாக மதச்சார்பற்ற அரசியல் களத்தில் இணைந்து பயணித்து வருகிறோம். எதிர்காலத்திலும் முக்கிய அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம். தொங்கு சட்டசபை குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

