Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உடனே அறநிலையத்துறை அமைச்சரை போடுங்க விஜய் – வானதி சீனிவாசன்

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்  வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் வெற்றியின் அம்சமாகக் கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று வசூல் வேட்டையால் புனிதத்தை இழந்து வருவது வேதனையளிக்கிறது. மன நிம்மதிக்காகவும், வேண்டுதல்களுக்காகவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் வருகை தரும் பக்தர்களிடத்தில் விரைவில் சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி சில நபர்கள் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இவர்களின் ஆசை வார்த்தைகளில் சிக்கும் பக்தர்கள் ஒரு நபருக்கு 500 முதல் 1000 வரை கொடுத்து ஏமாந்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக இதுபோன்ற புகார்கள் வந்தவண்ணம் இருப்பதை கோயில் நிர்வாகம் அறியவில்லையா அல்லது அறிந்தும் கமிஷன் போய்விடும் என்று கண்டு கொள்ளாமல் இருக்கிறதா என்று தெரியவில்லை. மேலும் சில நாட்களுக்கு முன்னர் பக்தர்கள் கேட்டை உடைத்துக் கொண்டு ஆலயத்தினுள் நுழைந்த சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.

இதுவரை இந்து சமய அறநிலையத் துறைக்கென்று அமைச்சரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக முதல்வர் விஜய், விரைவில் துறை அமைச்சரை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத் துறையில் கோயில்களில் இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுத்து பக்தர்கள் மன நிம்மதியுடன் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!