காவிரி ஆற்றில் மிதந்த வாலிபர் உடல் –
திருச்சியை அடுத்த ஜீயாபுரம் அருகே காவிரியாற்றுப் படுகையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக பாலூர் கிராம நிர்வாக அலுவலர் சுதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் ஜீயாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கிடந்த அந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஜீயாபுரம் போலீசார், உயிரிழந்த நபர் யார் ?, எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலக்ட்ரீஷியன் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்பு
திருச்சி திருவரங்கம் தீரன் நகர், மருதுபாண்டியர் சாலையைச் சேர்ந்தவர் அந்தோணி அரவிந்தன் (வயது 64). எலக்ட்ரீஷியனான இவர், கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இவருடைய குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அந்தோணி அரவிந்தன், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்று ரெயில் பாலத்தின் அருகே அவர் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் ஆண்ட்ரூஸ் சாமுவேல் அளித்த புகாரின் பேரில், கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
