சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை லட்சுமணன் மகன்கள் குருபாண்டியன் மற்றும் அவருடைய தம்பி பாலமுருகன் ஆகியோர் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் வெட்டி படுகொலை செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீசார் இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் வழக்குபதிவு செய்துள்ள நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய குருபாண்டியன், பாலமுருகன் இருவரும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் அண்ணன், தம்பி இருவரும் ஒரே காரில் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு கையெழுத்திட்டு விட்டு, மீண்டும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சேலம் ரோடு ரவுண்டானா அருகில் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் ஓட்டிச் செல்ல குருபாண்டியன், பாலமுருகன் மற்றும் ஒருவர் பின்னால் அமர்ந்து வந்தனர். அப்போது திடீரென அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் முந்திச்சென்ற ஒருவர் குருபாண்டியன் சென்ற காரை லிப்ட் கேட்பதுபோல் வழிமறித்துள்ளார்.
டிரைவர் வண்டியின் வேகத்தை குறைத்த நிலையில், அந்தப் பகுதியில் வேகத்தடையும் இருந்ததால் காரை மெதுவாக டிரைவர் ஓட்டியள்ளார். அப்போது பின்னால் மற்றொரு காரில் மின்னல் வேகத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் குருபாண்டியன், பாலமுருகன் உள்ளிட்டோரை படுகொலை செய்யும் நோக்கில் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கார் கண்ணாடிகள் முழுவதும் நொறுங்கி சேதமடைந்ததோடு, காரில் இருந்த குருபாண்டியன் உள்ளிட்ட 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதனிடையே அவர்களின் கூச்சல் சத்தம்கேட்டு அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் அதை, அங்கேயே விட்டுவிட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் ஓட்டிவந்த காரில் தப்பிச் சென்றார். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிய குருபாண்டியன் உள்ளிட்ட 4 பேரும் அதே சாலையில் இருந்த உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காரை ஓட்டிவந்து நிறுத்திவிட்டு உடனடியாக காவல் நிலையத்தில் பாதுகாப்பு கருதி தஞ்சமடைந்தனர். இச்சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் 10க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், கொலை வழக்கு குற்றவாளிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகல் வேளையில், அதுவும் நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலோ அல்லது சற்றுத் தள்ளியோ இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் நடப்பது அப்பகுதி மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
