தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டு, தற்போதைய முதலமைச்சரின் புகைப்படங்களை வைத்திருப்பதற்கு அதிமுக தலைமை கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அம்மா உணவகங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. “அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது ஜெயலலிதாவின் திருவுருவம்.
அப்படி வரலாற்றில் நிற்கும் அம்மா உணவங்களில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படங்களை நீக்கிவிட்டு உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால், அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா? எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel Universe வைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதல்வர் உணர வேண்டும்!
உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை நிறுவுவதுடன், அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
