பிரபல மலையாள நடிகர் சலீம்குமார் (56) உடல்நலக் குறைவால் காலமானார். கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சலீம்குமாரின் உயிர் பிரிந்தது. மலையாளம், தமிழ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் சலீம்குமார் நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். பிரபல மலையாள நடிகர் சலீம்குமார் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சலீம் குமார். பெரும்பாலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் ஆரி நடித்த ‘நெடுஞ்சாலை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழக ரசிகர்கள் மனதில் பதித்தார். மேலும் சில தமிழ் படங்களில் நடித்தாலும் ‘நெடுஞ்சாலை’ படம் மக்களை கவர்ந்தது.
அதேநேரம் மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோக்களான மோகன்லால், மம்மூட்டி தொடங்கி இன்றைய தலைமுறை இளம் ஹீரோக்கள் வரை அனைவருடன் இணைந்து நடித்தவர் சலீம் குமார். ‘ஆதாமின்டே மகன் அபு’ என்கிற படத்தில் கதையின் நாயகனாக தோன்றிய சலீம் குமார் சிறந்த நடிப்பிற்காக 2010ம் ஆண்டு தேசிய விருது மற்றும் கேரள மாநில அரசின் விருதினை வென்றார்
இந்த நிலையில் தான், உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சலீம்குமார் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் இன்று இறுதிச்சடங்கு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1969ல் கொல்லம் அருகே உள்ள பரவூரில் பிறந்த சலீம்குமார், ஒரு மிமிக்ரி கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பே சலீம் குமார் மேடை நாடகங்களில் பிரபலமான நபராக இருந்து சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருந்து அதனை சாதித்தும் காட்டினார்.
இஷ்டமானு நூறு வட்டம்’ படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சலீம் குமாருக்கு 2000ம் ஆண்டில் வெளியான பிரம்மாண்ட வெற்றிப் படமான ‘தென்காசிப்பட்டணம்’ மூலம் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது திரை வாழ்க்கை பெரும்பாலும் காமெடி கேரக்டர்களை கொண்டே அமைந்தது. அவரது நகைச்சுவை உணர்வு காரணமாக மலையாள ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.
நடிப்பைத் தாண்டி, சலீம் குமார் ‘கம்பார்ட்மென்ட்’, ‘கருத்த ஜூதன்’ மற்றும் ‘தெய்வமே கைதிதொழம் கே. குமரகனம்’ போன்ற படங்கள் மூலமாக எழுத்தாளராகவும் இயக்குநராகவும் தனது பன்முக திறனை வெளிப்படுத்தினார். 1996ல் தொடங்கி கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கேரள மக்களை சிரிக்க வைத்த சலீம் குமாரின் மறைவு கேரள மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
