Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆன்லைனில் பதிவு செய்தால் 5 நாளில் சாதிச் சான்றிதழ்! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை : பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான சாதிச் சான்றிதழ் (Community Certificate), புதிய குடும்ப அட்டைகள் (Ration Cards), முதியோர் உதவித்தொகை போன்ற சமூக நலத்திட்டங்கள் எவ்வித காலதாமதமும் இன்றி, மக்களுக்கு நேரடியாகவும் எளிதாகவும் கிடைப்பதற்காகத் தவெக அரசு புதிய நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகளுடன் நடத்திய அவசர ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது ஆன்லைன் மூலமாகச் சான்றிதழ்களுக்குப் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதக் குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய தொழில்நுட்ப உத்தி புகுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் “பொதுமக்கள் சான்றிதழ்களுக்காக ஆன்லைனில் பதிவு செய்தவுடன், அந்தந்த வருவாய் வட்டத்தில் இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஐந்தே நாட்களுக்குள் கள ஆய்வு செய்து அந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஒருவேளை அதிகாரிகள் 5 நாட்களுக்குள் அந்த மனுவை ஆய்வு செய்து முடிக்கவில்லை என்றால், ஆன்லைனில் கொடுக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் சிஸ்டம் மூலமாகத் தானாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் அளவுக்கு ஆன்லைன் மென்பொருள் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்கள் மற்றும் லஞ்ச ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும்” எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் வரவிருக்கும் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்துப் பேசிய அமைச்சர், மத்திய-மாநில நிதி ஒதுக்கீடு குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

“பருவமழை பாதிப்புகளை மிகத்திறமையாக எதிர்கொள்ளப் பேரிடர் மீட்புப் படைகள் (SDRF) தற்போது அனைத்து மாவட்டங்களிலும் முழு தயார்நிலையில் உள்ளன. பேரிடர் மேலாண்மைத் துறைக்காக நாம் மத்திய அரசிடம் முன்னெச்சரிக்கையாகக் கோரியிருந்த 1,000 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு முழுமையாகத் தமிழகத்திற்கு வழங்கிவிட்டது. இந்த நிதி மூலம் வெள்ளத் தடுப்புப் பணிகளும், மீட்பு உபகரணங்கள் வாங்கும் பணிகளும் மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன” எனவும் கூறினார்.

மேலும், அதனைத்தொடர்ந்து “இந்தியத் தேசிய அளவில் உள்ள ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் தவெக இணைவது குறித்து ஒட்டுமொத்த முடிவுகளையும் முதலமைச்சர் விஜய் அவர்களே சரியான நேரத்தில் மேற்கொள்வார் எனவும், “முதல்வர் விஜய் அவர்கள் அடிக்கடி செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. அவரது திட்டங்களும், மக்கள் நலனுக்கான செயல்பாடுகளுமே அதற்குப் பேசும். சிறந்த ஆட்சியைத் தருவதற்காகத்தான் தற்போது ஒவ்வொரு துறை வாரியாக முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் இந்த அதிரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.” எனவும் கூறினார்.

error: Content is protected !!