வீணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகியையோ, தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால், அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்’ என அதிமுக தெரிவித்துள்ளது.Politics
மேலும் அத்திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கும்பகோணத்தில் அஇஅதிமுக தொண்டர்களின் உழைப்பால் வென்று கவுன்சிலர் ஆன ஆதிலட்சுமி, சமீபத்தில் குதிரை பேரக் கட்சியில் சேர்ந்த நிலையில், அஇஅதிமுக தொண்டர்கள் வியர்வை சிந்தி கொடுத்த கவுன்சிலர் பதவியை நீக்கக் கோரிய கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம. ராமநாதனின் வீட்டைச் சூழ்ந்து அடியாட்களோடு தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
வெறும் கவுன்சிலர் பதவி சுகத்திற்காக இந்த இயக்கத்தின் தொண்டர்ளின் உழைப்பைச் சுரண்டி எடுத்துவிட்டு, இன்றைக்கு அதிகாரம் எங்கே இருக்கிறது என தேடி செல்பவர்கள், இந்த கட்சி கொடுத்த பதவியை துறந்துவிட்டு செல்வதில் என்ன தயக்கம்? இப்படி இன்னொரு கட்சி கொடுத்த பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது ஒட்டுண்ணித்தனம் இல்லையா?
கழகத்தின் மீதுள்ள உணர்வோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு ஜனநாயக ரீதியாக பதில் சொல்ல வக்கில்லாமல், ஆட்களை ஏவி வீட்டை மறித்து தாக்குவது தான் இன்றைய ஆளுங்கட்சி அங்கீகரிக்கும் மாற்று அரசியலா?
எதிரிகள் தீர்மானிக்கும் ஆயுதங்களை எடுக்க எங்களுக்கும் நேரம் ஆகாது. அம்மாவின் வளர்ப்பு நாங்கள் என்பதால் அரசியல் நாகரீகத்தோடு எதையும் எதிர்கொள்ளும் உறுதியோடு இருக்கிறோம்.
வீணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு நிர்வாகியையோ, தொண்டரையோ சீண்டிப் பார்க்க நினைத்தால், அதற்கான உரிய அரசியல் எதிர்வினைகளை இன்றைய கத்துக்குட்டி ஆளுங்கட்சி சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராம ராமநாதன் அவர்கள் வீட்டை மறித்து தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளது.
