திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் இன்று (21.06.2026) ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இவ்விபத்தில் மொத்தம் 64 பேர் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரதிஷ்டவசமாக 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 62 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், அவர்களின் உடல்களைச் சொந்த மாநிலத்திற்கு அரசுச் செலவில் அனுப்பி வைக்கவும் ஆணையிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ESI திட்டம் அல்லது வேலையாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்கவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கப் பேரபாய தொழிற்சாலைகளில் உடனடியாகக் குழு ஆய்வுகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் நேரடி ஆய்வு செய்து உரிய உதவிகளை வழங்கி வருகின்றனர்.
