கரூர் –திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூலக்காட்டனூர் பகுதியில் 5033 என்ற பதிவு எண் கொண்ட டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருகிறது. சாலையிலிருந்து மிக அருகில் அமைந்துள்ள இந்த மதுபானக் கடையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எம்ஆர்பி விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், இன்று அந்தக் கடையில் மது வாங்கிய ஒருவர் ஜி-பே மூலம் கூடுதல் தொகை செலுத்தியுள்ளார்.
அதனை வீடியோவாக பதிவு செய்ததை கவனித்த கடை ஊழியர்கள் முதலில் ரூ.5 மட்டும் திருப்பிக் கொடுத்ததாகவும், பின்னர் வாடிக்கையாளர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து ஐந்து ரூபாயை வாங்கி விட்டு பத்து ரூபாயாக கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இதே போல் அனைத்து கடைகளிலும் 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்து வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில் டாஸ்மார்க் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
