தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 8 ஆணவ கொலைகள் நடத்துள்ளதாகவும், இதுபோன்ற கொடூரங்களை தடுக்க விரைந்து தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும் விசிக-வை சேர்ந்த ஆளூர் ஷா நவாஸ், தவெக அரசை வலியுறுத்தி உள்ளார்.
ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்றக் கோரி சட்டப்பேரவையில் விசிக சார்பில் வலிமையாகக் குரல் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டதாக ஆளூர் ஷா நவாஸ் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த ஆணையத்தின் முன் கடந்த 18-03-2026 அன்று, தோழர் எவிடென்ஸ் கதிர் மற்றும் தோழர்களுடன் ஆஜராகி, ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தின் தேவை குறித்த ஆவணங்களை அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மீண்டும் கடந்த வாரம் (25-06-2026) (ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன்) ஆணையத்தை சந்தித்து முறையிட்டதையும் சுட்டி காட்டி உள்ளார்.
ஆணையத்தை நாங்கள் இருமுறை சந்தித்த இந்த 3 மாத இடைவெளியில், தமிழ்நாட்டில் 8 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாக ஆளூர் ஷா நவாஸ் வேதனை தெரிவித்து உள்ளார். இதனிடையே மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது. அதே உறுதியுடன் இப்போது தவெக அரசு, நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய்யை, வலியுறுத்தி கேட்டு கொண்டுள்ளார்.
