சென்னை கொடுங்கையூரில் 63 வயது மதிக்கத்தக்க மரக்கடை உரிமையாளரைக் கடத்தி, நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பணத்தை எடுத்து வருவதாகக் கூறி தப்பிய முதியவர் அளித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீசார் இந்த விரைவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் பகுதியில் மரக்கடை நடத்தி வரும் 63 வயது முதியவரை ஒரு கும்பல் ரகசியமாகக் கடத்திச் சென்றுள்ளது. அவரை ஒரு தனி அறையில் அடைத்து, வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். பின்னர், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி ரூ.5 லட்சம் தருமாறு அவரிடம் பேரம் பேசியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த முதியவர், தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றும், வெளியில் சென்று பணத்தை எடுத்து வருவதாகவும் தந்திரமாகக் கூறி அங்கிருந்து தப்பியுள்ளார். உடனடியாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்குச் சென்ற அவர், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்துப் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்மா (47), எஸ்தர் நான்சி (30) மற்றும் அவரது கணவர் முன்னா கருப்புசாமி (33) ஆகிய 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
