தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் நடித்துள்ளார் பாவா லட்சுமணன். அவருக்கு தற்போது 60 வயது ஆகிறது. சர்க்கரை அளவு அதிகரித்ததால் கால் விரல்கள் அகற்றப்பட்டன. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். சினிமா வாய்ப்புகளும் இல்லை. இதனால் பொருளாதார ரீதியாக நலிவடைந்தார் பாவா லட்சுமணன்.
அவருக்கு கேபிஒய் பாலா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் உதவி செய்தனர். இருப்பினும் தங்குவதற்கு வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதையறிந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், எம்.எல்.ஏ ஹாஸ்டலில் பாவா லட்சுமணனுக்கு வீடு ஒன்றை ஒதுக்கி கொடுத்தார். இந்த வீட்டில் தற்போது தங்கியிருக்கிறார் பாவா.
முன்னதாக பாவா லட்சுமணனுக்கு லெஜண் சரவணன் ரூ.2 லட்சம் கொடுத்து உதவிக்கரம் நீட்டியிருந்தார். தற்போது அவரது வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கி உதவியிருக்கிறார். நடிகர் பாவா லட்சுமணனுக்கு கட்டில், மெத்தை, பீரோ, வாஷிங் மிஷின், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, குக்கர், பாத்திரங்கள், ப்ரிட்ஜ், சோபா செட் என அனைத்து வீட்டு உபயோக பொருட்களையும் வாரி வழங்கினார் லெஜன்ட் சரவணன்.
திரைத்துறையிலிருந்து ஒருவர் கஷ்டப்படும்போது இப்படி ஓடி வந்து உதவிகளை அள்ளி கொடுக்கும் சரவணனுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.
முன்னதாக, ரஜினிகாந்த்தும் பாவா லட்சுமணனுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். மேலும், மாதா மாதம் பத்தாயிரம் ரூபாயை வங்கி கணக்கிலும் போட்டுவருகிறார். அது லட்சுமணனுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. தங்கள் துறையில் ஒருவர் நலிந்துபோனால் அப்படியே விட்டுவிடமாட்டோம் என்பதை ரஜினி, சரவணன் உள்ளிட்டோர் நிரூபித்துவிட்டதாக பலரும் நெகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்.
