பெங்களூருவில் இருந்து கேரளாவுக்குச் சொகுசு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 70 கிராம் ‘மெத்தாம்பெட்டமின்’ என்ற ஆபத்தான செயற்கைப் போதைப்பொருளை, கோவை

மாவட்டத் தனிப்படை போலீசார் ஆபரேஷன் மூலம் பறிமுதல் செய்து 5 பேர் கொண்ட நெட்வொர்க் கும்பலை அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை வேரறுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பவன் K. ரெட்டி, தலைமையில் தீவிர சோதனைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தனிப்படை உதவி ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், கருமத்தம்பட்டி நான்கு சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அதிரடி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியே அதிவேகமாக வந்த மாருதி சுசூகி ரிட்ஸ் காரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனையிட்ட போது, காரின் ரகசியப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 70 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாகப் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் NDPS சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து (Cr. No. 176/2026), பாலக்காட்டைச் சேர்ந்த அஜ்மல் (29), சாய்பாபா காலனியைச் சேர்ந்த அபுதாஹிர் (24), வீரபாண்டியைச் சேர்ந்த பாலாஜி (26) மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த முகமது அலி (27) ஆகிய 4 பேரைக் கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட புலனாய்வில், இந்த வழக்கில் முதன்மைச் குற்றவாளியாக செயல்பட்ட திருச்சூரைச் சேர்ந்த ஜசீர் (30) என்பவரை போலீசார் தூக்கினர்.
பெங்களூருவில் பணியாற்றிய போது போதைப்பொருள் மாஃபியா கும்பலுடன் தொடர்பை ஏற்படுத்திய ஜசீர், இந்த 4 பேரையும் பெங்களூருவுக்கு அனுப்பி போதைப்பொருளை வாங்கி, கேரளாவுக்குக் கடத்தத் திட்டமிட்டது அம்பலமானது.
ஏற்கனவே கேரளாவில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஜசீரையும் கைது செய்த போலீசார், கர்நாடகா மற்றும் கேரளாவை இணைக்கும் இந்த சர்வதேச நெட்வொர்க்கின் நொறுக்கத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
