தேசியத் தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரபலத் திரைப்பட நடிகை ஜோதிகா வலியுறுத்தியுள்ளார். மேலும், நீதிக்காகக் களத்தில் நின்று போராடும் மாணவர்களுக்குத் தனது முழு ஆதரவையும் தெரிவித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு மற்றும் மதிப்பெண் குளறுபடிகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இம்முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி டெல்லியில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக முன்னணித் திரை பிரபலங்கள் குரல் கொடுத்து வரும் சூழலில், நடிகை ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அவர் நேரடியாகக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “களத்தில் நின்று போராடும் மாணவர்களுடன் நான் உறுதியாகத் துணை நிற்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
