புதுக்கோட்டை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் வறுமையிலும், தொழில் நெருக்கடியிலும் சிக்கித் தவிப்பதால், அவர்களின் குழந்தைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயர்கல்வி பயில முடியாத அவல நிலை நிலவுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள 32 கடலோர கிராமங்களில் சுமார் 3,000 நாட்டுப்படகுகளை கொண்டு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடித் தொழிலையே தங்களின் ஒரே வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
தினசரி கடலுக்குச் சென்று திரும்பினாலும், போதிய அளவில் மீன்கள் கிடைக்காததால், படகுகளுக்கான டீசல் செலவுக்கே கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, விதிமுறைகளை மீறி கரைக்கு அருகில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளால் நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் அடிக்கடி அறுபட்டு சேதமடைகின்றன. இதனால் அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாததும், பொருளாதார நெருக்கடியும் காரணமாக, அந்த 32 கடலோர கிராமங்களில் உள்ள குழந்தைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பள்ளிப் படிப்புடன் கல்வியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை கல்லூரிக்கு அனுப்ப முடியாமல், மீண்டும் தங்களுடன் மீன்பிடித் தொழிலுக்கே அழைத்துச் செல்லும் கட்டாயத்தில் பெற்றோர்கள் உள்ளனர்.
எனவே, நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கான உரிய வாய்ப்புகளை உருவாக்கவும் அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமாவடி முதல் ஏனாதி வரை உள்ள 32 கடலோர கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
