திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஜகாங்கீர் என்பவரின் மகன் சம்சுதீன் (23). இவர் திருச்செந்தூர் இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புதிய நடைமேடை அமைக்கும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த சம்சுதீன், இரும்பு கம்பிகளை வெட்டும் பணியை மேற்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருச்செந்தூர் காவல்துறையினர், சம்சுதீனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
